உள்ளூர் செய்திகள்

கோவையில் பதநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்தது

Published On 2023-05-16 09:26 GMT   |   Update On 2023-05-16 09:26 GMT
  • கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
  • தரம் மிகுந்த இயற்கை சார்ந்த விளை பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.

வடவள்ளி,

கோவை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. இதனால் மாநகரம் மட்டுமின்றி புறநகரங்களிலும் அனல் வெயில் கொளுத்தி வருகிறது.

எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. இதனால் அனல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.கோவையை சுட்டெரித்து வரும் கோடை வெப்பத்தின் தாக்கம் இரவு நேரம் வரையிலும் நீடிக்கிறது. எனவே வீட்டுக்குள் அனல் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் குளிர்ச்சி மிகுந்த தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைப்பழம் ஆகியவை செறிந்த நீராகாரங்களை அதிகம் விரும்பி உட்கொண்டு வருகின்றனர்.

எனவே கோவை காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.நுங்கு, பதநீர், இளநீர், ஆகிய நீர் ஆகாரங்களுக்கு உடல் வெப்பத்தை பெரும் அளவில் குறைக்கும் தன்மை உண்டு. எனவே பொதுமக்களின் பார்வை இப்போது இயற்கை சார்ந்த நுங்கு உள்ளிட்ட குளிர் ஆகாரங்களின் பக்கம் திரும்பி உள்ளது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. அவைகளில் இருந்து பதநீர், நுங்கு ஆகியவை தாராளமாக விளைந்து வருகிறது. தரம் மிகுந்த இயற்கை சார்ந்த விளை பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.

எனவே கோவையில் பதநீர், நுங்கு சீசன் களை கட்ட தொடங்கி விட்டது. இயற்கையில் விளைந்த குளிர்ச்சி மிகுந்த பொருட்கள் என்பதால், மாநகரின் பெரும்பாலான இடங்களில் நுங்கு, பதநீர் விற்பனை சூடுபிடித்து வருகிறது. சாலையோரங்களிலும் நுங்கு வியாபாரம் களை கட்டி வருகிறது.

ஆண்-பெண் உள்ளிட்ட இருபாலர்களும் ரோட்டோர வியாபாரிகளிடம் நுங்கு, பதநீர் வாங்கி உற்சாகத்துடன் அருந்தி வருகின்றனர். 

Tags:    

Similar News