உள்ளூர் செய்திகள்

கோவையில் என்ஜினியரை காரில் கடத்தி ரூ 5 லட்சம்- நகை கொள்ளை

Published On 2022-12-05 09:38 GMT   |   Update On 2022-12-05 09:38 GMT
  • 9 பேர் கும்பலை போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
  • சம்பவத்தன்று இரவு, தாஜூதீன் விடுதியின் வரவேற்பறையில் இருந்தார்.

கோவை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் தாஜூதீன் (வயது 33).

இவர் கடந்த 9 மாதங்களாக கோவை கணபதி அலமேலு மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து சிவில் என்ஜினியரிங் வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் அலுவலகமும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தங்கி இருக்கும் தனியார் விடுதியை மெர்வின் மற்றும் பரத் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர்.

இவர்களின் நண்பர் ஹரி என்பவர் அடிக்கடி விடுதிக்கு வந்து சென்றார். இதையறிந்த விடுதியின் உரிமையாளரான தண்டபாணி 3 பேரையும் அழைத்து தாஜூதினுக்கு ஆதரவாக பேசி, ஹரியை இனிமேல் இங்கு வரக்கூடாது என விரட்டி விட்டார்.

இதனால் அவரது நண்பர்கள் பரத், மெர்வின் ஆகியோர் கோபத்துடன் வெளியில் சென்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு, தாஜூதீன் விடுதியின் வரவேற்பறையில் இருந்தார்.

அப்போது அங்கு பரத், மெர்வின் உள்பட 9 பேர் கும்பல் காரில் வந்து இறங்கினர். அவர்கள் தாஜூதீனிடம் சென்று உன்னிடம் பேச வேண்டும் என அவரது அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் அறையில் இருந்த ஸ்பீரேவை எடுத்து அடித்து, தீ பற்ற வைத்தனர். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

பின்னர் அறையில் இருந்த ரூ.5 லட்சம், வைரம், 3 பவுன் தங்க நகை, மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை எடுத்தனர்.

மேலும் தாஜூதீனை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

தொடர்ந்து அவரது தந்தைக்கு போன் செய்து, உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். மகன் உயிருடன் வேண்டும் என்றால், எங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர்.

இதனை தொடர்ந்து அவர் பணத்தை கொடுத்து மகனை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே தாஜூதீன் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பரத், மெர்வின் உள்பட 9 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்த தலைமறைவான 9 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News