உள்ளூர் செய்திகள்

கட்சி நிர்வாகி கடத்தப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு

Published On 2022-06-29 15:24 IST   |   Update On 2022-06-29 15:24:00 IST
  • ரூ.10 லட்சம் கேட்டு போனில் அந்த கும்பல் மிரட்டியது.
  • கடத்தல்காரர்கள் சிவசம்புவின் கண்ணை கட்டி விட்டு அவரை சாலையோரமாக இறக்கி விட்டு சென்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அடுத்த முனியன்கொட்டாயை சேர்ந்தவர் சிவசம்பு (வயது 35). இவர் மளிகை பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்று வந்தார்.

மேலும் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராக இருந்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு இவர் இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அவரது மனைவி பிரியாவுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் சென்றபோது, பின்னால் காரில் வந்த சுமார், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க, கும்பல் சிவசம்புவை மடக்கியது.

அவர்கள் சிவசம்புவை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர். மேலும் அவரது மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு போனில் அந்த கும்பல் மிரட்டியது. இது குறித்து பிரியா கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கடத்தப்பட்ட சிவசம்புவை மீட்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில், டேம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கபிலன், போலீசார் விஜயகுமார், தங்கராஜ், அன்பழகன், சுகேல் ஆகியோர் கொண்ட படையினர் சிவசம்புவை தேடி வந்தனர். அவரது செல்போன் லோகேசனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என விசாரித்தனர்.

அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஒப்பதவாடி அருகே உள்ள லட்சுமிபுரம் பக்கமாக இருப்பது தெரிய வந்தது. போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல்காரர்கள் சிவசம்புவின் கண்ணை கட்டி விட்டு அவரை சாலையோரமாக இறக்கி விட்டு சென்றனர். அவரை போலீசார் மீட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திருப்பத்தூர் மற்றும் ஜெகதேவி பகுதியை சேர்ந்த நபர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிவசம்புவை பணம் கேட்டு கடத்தியதாக திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள எஸ்.மோட்டூரை சேர்ந்த பழனி (வயது 32), முருகன்வட்டத்தைச் சேர்ந்த குமரவேல் (28), பர்கூர் ஜெகதேவி விக்ரம் (21), திருப்பத்தூர் மாவட்டம் புதுபூங்குளம் மணி என்கிற மணிகண்டன் (34), தோரணம்பதி மணி (30), ஜெகதேவி முரளி (42) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News