திருச்செந்தூர் வட்டார பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி விதை நெல் மானிய விலையில் விற்பனை - வேளாண்மை துறை அதிகாரி தகவல்
- அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது
- டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது.
உடன்குடி:
திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பிசான பருவத்திற்கு தேவையான அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தண்டுதுளைப்பான், புகையான், இலைசுருட்டுபுழு உள்ளிட்ட நெல்பயிரை தாக்கும் பூச்சிகளுக்கும், குலைநோய், இலைப்புள்ளி நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட பிசான பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான டி.பி.எஸ் 5 மற்றும் டி.கே.எம்.13ஆகிய சான்று விதைகள் திருச்செந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.
டி.பி.எஸ்.5 ரகம் 110 முதல் 115நாட்கள் வயதுடையது. நல்ல அரவைத்திறன் கொண்டது. மேலும் அம்பை 16 ரகத்தை விட அதிக மகசூல் தரக்கூடியது. சராசரியாக 6300கிலோ வரை மகசூல் தரக்கூடியது. டி.கே.எம்.13 ரகம் 130நாட்கள் வயதுடையது. இது கர்நாடக பொன்னி ரகத்தை விட 10சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியது.
இவ்விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார்நகல் மற்றும் சர்வே எண்ணுடன் திருச்செந்தூர் வட்டார வோளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.