உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தியில் தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு

Published On 2023-05-11 09:55 GMT   |   Update On 2023-05-11 09:55 GMT
  • ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம்.
  • 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கை யானது இன்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.

இதற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

தொடக்கநாளான இன்று தஞ்சை தாலுகா பெரம்பூர் சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் வழங்கினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மனு அளிக்கப்பட்டதில் இருந்து அதனை பரிசீலித்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம். தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பட்டா மாற்றத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 13650 மனுக்கள் நிலுவையில் இருந்தது.

ஆனால் தற்போது பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும். இவைகள் அனைத்தும் அரசு புதிய அரசாணை மற்றும் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை காரணமாகும்.

இது தவிர பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண தற்போது வி.ஏ.ஓ.க்களுக்கும் சர்வேயர் மூலம் தகுந்த பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதன் மூலமும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

இன்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி அடுத்ததாக வருகிற 16-ஆம் தேதி வல்லம் சரக்கத்திற்கும், 17-ந் தேதி தஞ்சை சரக்கத்திற்கும், 18-ந் தேதி ராமாபுரம், 19-ந் தேதி நாஞ்சிகோட்டை சரகத்திற்கும் நடைபெற உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) சீமான், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் ,தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், ஆதிதிராவிடர் நலன் ரகுராமன், ஏ.டி.எஸ்.ஓ. ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News