உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி

சமூகவலைத்தளங்களில் என்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்வேன் - சசிகலா புஷ்பா பேட்டி

Published On 2022-10-27 08:37 GMT   |   Update On 2022-10-27 08:37 GMT
  • எம்.பி.யாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது
  • அவதூறு பரப்புவதின் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நினைக்கின்றனர்.

தூத்துக்குடி:

பா.ஜ.க. மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் நிருபர் களிடம் கூறியதாவது:-

டெல்லியில் வீடு

எம்.பி.யாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது. அதனை 3 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தல் செய்வது வழக்கம். அனைத்து எம்.பி.களுக்கும் இதுதான் நடைமுறை.

அந்த அடிப்படையில் எனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதமாக கட்சிப் பணி அதிகமாக இருந்த காரணத்தால் நான் டெல்லி செல்லவில்லை.

இந்நிலையில் வீட்டை காலி செய்ய டெல்லியின் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. டெல்லியில் எனக்கு சொந்த வீடும் உள்ளது. அரசு வீட்டை காலி செய்தால் அந்தப் பொருட்களை நான் அங்கு எடுத்துச் செல்வேன்.

ஆனால் இதனை வைத்து என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பரப்பி உள்ளனர். அதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை உள்ளது. இதனை சமீபகாலமாக யார் பயன்படுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

வழக்கு

எனவே தவறான தகவல் பரப்பியவர் மீது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். இப்படி அவதூறு பரப்புவதின் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நினைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வாரியார், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், மண்டல தலைவர்கள் மாதவன், சிவகணேசன், மண்டல பார்வையாளர் சின்னத் தம்பி மற்றும் காளிராஜா, கலைச்செல்வன், செல்வி, சுமித்ரா, புனிதா, சிலம்பு உட்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News