உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மனைவியிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற கணவர்- உறவினர்கள் தாக்கியதில் 2 பேர் காயம்

Published On 2022-11-15 14:48 IST   |   Update On 2022-11-15 14:48:00 IST
  • முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது.
  • உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

களக்காடு:

பொதுவாக கணவன், மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டால் மனைவி கோபித்து கொண்டு, தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக கணவர்கள், மனைவியை விட்டு பிரிந்து தாயார் வீட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. இதை நிரூபணம் செய்யும் வகையில் நாங்குநேரி அருகே சம்பவம் அரங்கேறி உள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள தட்டான்குளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கோமதி (வயது63). சுப்பையா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

இவர்களது மகன் முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. அவர்கள் இருவரும் அதே ஊரில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகனுக்கும், அவரது மனைவி உத்ராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் மனைவியிடம் கோபித்து கொண்டு, அவரை விட்டு பிரிந்து தனது தாயார் கோமதி வீட்டிற்கு துணிமணிகளுடன் சென்று விட்டார்.

சம்பவத்தன்று கோமதி தனது வீட்டில் மகன்கள் முருகன், சித்திரை வேலு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதையடுத்து முருகன் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஒலிமுத்து உள்பட 4 பேரும் சேர்ந்து, கோமதி, அவரது மகன் சித்திரை வேலையும் கம்பால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த கோமதி, அவரது மகன் சித்திரவேல் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒலிமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News