உள்ளூர் செய்திகள்

கோவைக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டும் ஓசூர் விவசாயிகள்

Published On 2023-07-16 15:34 IST   |   Update On 2023-07-16 15:34:00 IST
  • கோவைக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.
  • கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கோவைக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பல்வேறு மலர்கள் மட்டுமின்றி முள்ளங்கி, கேரட், பீட்ருட், பாகற்காய், புடலை, அவரை, துவரை, பீர்க்கன், வெள்ளரியுடன் சேர்த்து தற்போது கோவைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை சீராக பலன் கிடைப்பதால், ஓசூர் பகுதியில் கோவக்காய் சாகுபடி பரப்பினை விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில், கோவைக்காயை கிராம மக்கள் சமையலில் தவறாமல் பயன்படுத்தி வந்தனர். மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காயின் பயன்பாடு, தற்போது நகரப்பகுதியிலும் அதிகரித்துள்ளது. இதனால், நுகர்வு இரட்டிப்பாகியுள்ளது.

இதையடுத்து, ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பாகலூர், கெலவரப்பள்ளி விவசாயிகள் கோவைக்காய் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவைக்காயில் கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.

ஒரு முறை நடவு செய்தால், 3 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கிறது. குறைந்தளவு தண்ணீர் போதுமானது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கோவைக்காய்க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ரத்தம் சுத்திகரிப்பு, சரும பாதிப்பு, கண் நோய், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக திகழ்வதால், விற்பனை அதிகரித்து வருகிறது.

நடவு செய்து 60 நாளில் கொடிகள் நன்கு வளர்ந்து காய்கள் அறுவடைக்கு வந்து விடுகிறது. ஆண்டுக்கு சராசரியாக ஏக்கருக்கு 25 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். உள்ளூரிலும் அதிக வரவேற்பு உள்ளது. தற்போது, கிலோவுக்கு ரூ.40 வரை விலை கிடைக்கிறது என்றனர்.

Tags:    

Similar News