நிலக்கடலையில் அதிக மகசூல் இருப்பதை படத்தில் காணலாம்.
நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.
- மானாவாரியாக சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிரினை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. இம்மழையை பயன்படுத்தி மானாவாரியாக சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிரினை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணெய் வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகபடுத்த பலவகை நலத்திட்டங்களை வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தி வருகின்றன.
நிலக்கடலையில் டி.எம்.வி-14, தரணி மற்றும் கே-1812 ஆகிய உயர் விளைச்சல் ரகங்களை இப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீ-க்கு 10 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க வேண்டும்.
ஒரே மாதிரியான பொறுக்கு விதைகளை பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும். இதனால் நல்ல மசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான அளவு நிலக்கடலை விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவைப்படும் நிலக்கடலை ரகங்களை வேளாண்துறை அலுவலர்கள் மூலம் மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் மக்கிய தொழுவுரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது அடியுரமாக இட வேண்டும்.
இதே போன்று விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்கும் பொருட்டு, விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சுடோமோனஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டைசிம் பூஞ்சான விதை நேர்த்தியும் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர்க்கு கொடுக்கும் பொருட்டு விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோபியம் (நிலக்கடலை) 2 பாக்கெட் மற்றும் பாஸ்போ பேக்டரியா 2 பாக்கெட் ஆகியவற்றை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்த கலவையில் உயிர் உர விதை நேர்த்தி செய்து நிழலில் நன்கு உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.
மேலும் நிலக்கடலை நுண்ட்டச்சத்து 5 கிலோ வினை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மண்பரப்பில் தூவ வேண்டும். விதைத்த 40-45-ம் நாட்களில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தினை மண்ணை கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகசத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான மணிகள் அதிக அளவில் உருவாக உதவுகிறது.
மேலும் மானாவாரி நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி, சிவப்பு கம்பளிபுழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளதால் தேவையான பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விவசாயி களும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி விதை அலு வலரை அணுகி கரு, ஆதார நிலை நிலக்கடலை விதை களை வாங்கி விதைப் பண்ணைகளை அமைத்து, அனைத்து தொழில் நுட்பங்களையும் கையாண்டு அதிக மகசூல் பெற்று தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கி, அதன் மூலம் அதிக விலை பெற்று அதிக வருமானம் பெறலாம் என நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சித்திரைச் செல்வி தெரிவித்துள்ளார்.