பாளை சித்த மருத்துவ கல்லூரி பகுதியில் இளநீர் பருகும் மாணவிகள்.
நெல்லையில் கோடை தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் - பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகம்
- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனி இருந்து வந்தது.
- கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட வெயிலால் பெரும்பாலான சாலைகளில் கானல் நீர் தோன்றியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனி இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்த நிலையில் சில நாட்களாக பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்ட வெயிலால் பெரும்பாலான சாலைகளில் கானல் நீர் தோன்றியது. இதனால் வெயிலை சமாளிக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குளிர்ச்சியான பழங்களை தேடி பழக்கடைகளில் குவிந்து வருகின்றனர். மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான பழக்கடைகளில் ஜூஸ்கள் அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒருசில இடங்களில் வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப் பட்டனர். துணியால் தலை, முகம் உள்ளிட்டவற்றை மூடிக்கொண்டு பயணம் மேற்கொண்டனர். மாநகரில் கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காண முடிந்தது.
குளிர்ச்சி பானங்கள்
அதேநேரத்தில் பெரும்பாலான இடங்களில் சாலையோர பழக்கடைகள் புதிதாக தோன்றி உள்ளன. மேலும் கம்பங்கூழ், கேப்பை கூழ் உள்ளிட்டவைகளும் சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் வைத்து விற்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பைபாஸ் சாலைகளில் உள்ள கடைகளில் விற்பனைக்காக உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்ப்பூசணி பழங்கள், இளநீர், பதநீர், நுங்கு உள்ளிட்டவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் வெள்ளரிக்காய், குளிர்பானங்களுக்கும் மக்களிடையே நாட்டம் அதிகரித்துள்ளது.