உள்ளூர் செய்திகள்

உக்கடம் பஸ்நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை

Published On 2022-09-09 09:34 GMT   |   Update On 2022-09-09 09:34 GMT
  • பஸ்நிலையத்தில் கூச்சலிட்டபடி குடிமகன்கள் ஓடுகிறார்கள்
  • பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்

 குனியமுத்தூர்,

கோவையில் உக்கடம் பஸ்நிலையம் மிகவும் பழமை வாய்ந்த பஸ்நிலையமாகும். பாலக்காடு, மதுரை, ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி செல்லும் பஸ்களும், ஏராளமான டவுன் பஸ்களும் இந்த பஸ் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. எனவே ஏராளமான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் அதிகமாக நிற்பதை இப்பகுதியில் காணலாம். எனவே அந்த சமயம் பெண்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக குடிமகன்களின் ஆக்கிரமிப்புகளும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கூட்டத்தில் பெண்கள் நிற்பதை கண்டுகொள்ளாமல் புகை பிடிக்கின்றனர் என்றும் ஒருவருக்கு ஒருவர் ஆபாசமாக பேசி கொண்டு நிற்பதாகவும் பயணிகள் குறை கூறி வருகின்றனர்.

இது பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளின் முகம் சுளிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. திடீரென்று போதை நபர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போன்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடும்போது பயணிகளின் மனம் பதற வைக்கிறது. இரவு நேரங்களில் மது குடித்து விட்டு ஆங்காங்கே காலி பாட்டில்களையும் வீசிவிட்டு செல்கின்றனர்.

மேலும் பஸ் நிலையத்திற்குள் இருக்கும் இருக்கைகளிலும் படுத்துக் கொள்கின்றனர். இதனால் பயணிகள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபற்றி பயணிகள் கூறுகையில், உக்கடம் பஸ் நிலையத்தை ஒட்டி போலீஸ்நிலையம் உள்ளது. போலீசார் அவ்வப்போது, பஸ் நிலையத்திற்குள் ரோந்து வந்தால் போதை நபர்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News