உள்ளூர் செய்திகள்

ஜக்கனாரை கிராமத்தில் ஜெடையலிங்கா சுவாமி கோவிலில் குண்டம் திருவிழா

Published On 2023-03-07 14:31 IST   |   Update On 2023-03-07 14:31:00 IST
  • 100-க்கும் ேமற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.

அரவேணு,

கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து ஜெடையலிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த நவம்பர் மாதத்தில் ஜக்கனாரை ஊர் பிரமுகர்கள் ஜெடையலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று, அங்குள்ள வளாகத்தில் வளர்ந்திருந்த நகா மரத்தை வெட்டி, பூக்குண்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அதே பகுதியில் காய வைத்துவிட்டு வந்தனர். இந்த மரத்தின் விறகை மட்டுமே குண்டம் திருவிழாவிற்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே குண்டத்தில் இறங்குவதற்காக கோவில் பூசாரி உள்பட பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடும் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து விழாவை நடத்த சுவாமியிடம் அனுமதி பெற்று ஜக்கனாரை கிராமத்தில் உள்ள தெவ்வமனை ஹிரியோடையா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 8 ஊர்களுக்கு சுவாமி ஊர்வலமாக உலா சென்றார்.

அங்கு வீடு, வீடாக பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் நேற்று அதிகாலை ஜெடையலிங்கா சுவாமி கோவில் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு விரதம் இருந்த பக்தர்கள் சென்று சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் நகா மரத்தின் விறகுகளை வைத்தனர். இதைத்தொடர்ந்து குரும்பர் இன மக்கள் ஜெடையலிங்கா சுவாமி கோவிலுக்கு வந்து, குண்டம் இறங்க உள்ள இடத்தில் கற்களை உரசி விறகுகளில் தீ மூட்டினர். அதாவது குண்டத்திற்கு தீ மூட்டுவதற்கு தீப்பெட்டியை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் குரும்பர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தயாராக இருந்தனர். அப்போது காலநிலை சற்று மாறி சில நிமிடங்கள் மட்டும் பலத்த காற்று வீசினால் மட்டுமே சுவாமி குண்டம் இறங்க அனுமதி அளித்ததாக ஐதீகம். அதன்படி பலத்த காற்று வீசியது. தொடர்ந்து முதலில் பூசாரியும், அவரை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News