கம்பத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள திராட்சை.
தேனியில் கடும் வெப்பம் காரணமாக திராட்சை பறிப்பில் தாமதம்
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல்
- வெயில் காரணமாக திராட்சை பழுக்க கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படுகிறது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி பகுதியில் விதை இல்லா திராட்சையும் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 2 முறை அறுவடை பணி நடக்கிறது. தேனி மாவட்டத்தில் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக திராட்சை அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால் இங்கு ஒயின் தொழிற்சாலையும் உள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டி ராவில் கூட ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை பணி நடக்கும் நிலையில் தேனி மாவட்டத்தில் சுவை மிகுந்த திராட்சை 2 முறை அறுவடை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நவம்பர் முதல் மே மாதம் வரை மகாராஷ்டிராவில் இருந்து விதை இல்லா திராட்சை வரத்து இருக்கும். அந்த சமயங்களில் பன்னீர் திராட்சைக்கு விலை இருக்காது.
இந்த ஆண்டும் பன்னீர் திராட்சை கொள்முதல் விலை கிலோ ரூ.25 ஆக உள்ளது. தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் திராட்சை பழங்கள் அதிக அளவு விற்பனையாகும். பழச்சாறு கடைகளிலும் திராட்சைக்கு முதலிடம் இருக்கும். ஆனால் வெயில் அதிகரிப்பின் காரணமாக திராட்சை பழுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை தொடங்கியுள்ள நேரத்தில் சில்லறையில் திராட்சை ரூ.90 வரை விற்கப்படுகிறது. ஆனால் வெயில் காரணமாக திராட்சை பழுக்க கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படுகிறது.
120 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பழங்களு க்கு தற்போது 140 நாட்கள் வரை ஆகிறது. மழை பெய்து காற்று வேகமாக அடித்தால் விரைவாக பழுக்கும் நிலை உள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ள நேரத்தில் பழங்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவ சாயிகள் கவலையடைந்து ள்ளனர்.