கலெக்டர் ஷஜீவனா மற்றும் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் மாணவிக்கு அரசு மாதிரி பள்ளியில் சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினார்.
தேக்கம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மாதிரி பள்ளி தொடக்கம்
- இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனியாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும்.
- பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.
தேனி:
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிமுக கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
இந்த கல்வியாண்டில், மாதிரி பள்ளிகள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்காக தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தேனி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனியாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும்.
பாடங்களை மனப்பாட முறையில் கற்காமல் அறிவியல் பூர்வமாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுலபமாகவும் மாணவர்கள் அறிந்து புரிந்து படிக்கும் வகையில் இங்கு பாடத்திட்டங்கள் நடத்தப்படும். பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை சிறப்பு தேர்வுகளில் பங்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல உயர்கல்வி பயிலாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை பெற்றோர்களுடன் வரவழைத்து உரிய ஆலோசனைகள் வழங்கி மாணவர்களுக்கு விருப்பமான கல்வி பயில்வதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
தேசிய மற்றும் உலக அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சென்று நம் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக இம்மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சிறப்பு அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பிற்கு 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், உயிரியல் என பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு, விடுதி உட்பட அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுத்து கல்வி கற்பிக்கப்படும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.