உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்.

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2023-08-16 07:55 GMT   |   Update On 2023-08-16 07:55 GMT
  • விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேடசந்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
  • நஷ்டஈடு வழங்க தாமதமானதால் ஜப்தி நோட்டீசை ஒட்டி பயணிகளை கீழே இறக்கிவிட்டு பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேடசந்தூர்:

திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன்(35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் அருகில் உள்ள தோப்பூருக்கு வந்தார். அங்கு அவரை இறக்கிவிட்டு மீண்டும் தனது பைக்கில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கோட்டைமந்தயம் அருகே இவர் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் இவர்மீது மோதியது. இதில் ஒரு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். தனக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேடசந்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.3லட்சத்து 60ஆயிரத்து 754 வழங்கவேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த தொகையை வழங்காமல் போக்குவரத்து கழகம் தாமதம் செய்து வந்தது. இதனைதொடர்ந்து தமிழ்ச்செல்வன் மீண்டும் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் வேடசந்தூர் பஸ்நிலையத்தில் ஜப்தி செய்யப்பட்டது. கோர்ட்டு அமீனா பஸ்சில் ஜப்தி நோட்டீசை ஒட்டி பயணிகளை கீழே இறக்கிவிட்டு பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டுவந்தார். இதனால் பஸ்நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News