உள்ளூர் செய்திகள்

சீமான் (கோப்பு படம்)

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை- சீமான்

Published On 2022-08-20 22:30 GMT   |   Update On 2022-08-20 22:30 GMT
  • மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மீனவர்களுக்கு இல்லை.
  • துறைமுகத்தின் தவறான கட்டுமானத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கி மீனவர்கள் உயிரிழந்து வருவதாகவும், இதனால் துறைமுக மறுசீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

பூகோள அமைப்பை ஆராயாமல் தவறான முறைப்படி இந்த துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. சாதாரணமாக மீன்பிடித் துறைமுகங்களுக்கு முகத்துவாரத்தின் அகலம் குறைந்தபட்சம் 300 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் இந்த துறைமுகத்தில் 80 மீட்டர் அகலத்தில் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்திற்காக சிறந்த வரைபடம் தயாரித்து வைத்துள்ளனர். மீனவர்களின் ஆலோசனைபடி துறைமுகம் கட்டி இருந்தால் இந்த அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. துறைமுகத்தின் தவறான கட்டுமானத்தால் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

விவசாய நிலத்தை அழித்து விவசாயத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற அரசுகள் தற்போது மீனவ சமுதாயத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது. மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மீனவர்களுக்கு இல்லை.

குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கேரள துறைமுகங்களுக்கு அனுப்புகின்றனர். இதுவரை சுமார் 80 லட்சம் டன் கற்கள் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News