போடியில் சாராயம், புகையிலை பொருட்களுடன் வடமாநில கும்பல் கைது
- பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.
- நீண்ட காலமாக புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். மேலும் தோட்ட வேலைக்கு ஜீப்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த வழியாக கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் போடி தாலுகா போலீசார் முந்தல் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநில வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வாகனங்களில் வந்த மத்திய பிரதேசம் டிண்டோரி மாவட்டம் மார்வாரி பகுதியை சேர்ந்த கிரிப்பல்சிங் மரவி (வயது39), தீபக்உக்கே (31), சஞ்சய்குமார் (30), அம்ரத்குமார் கைருவார் (25), லலித் (19), வீரசேவ்உக்ரே (35), சிவம் பன்வாசி (26), லலித்குமார் தர்வையா (24), முக்கேஸ்தெக்கம் (27), அனிஷ்யாதவ் (29), துளசிராம் துர்வாரே (40), அரவிந்த் மார்வி (22) ஆகியோரை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் வட மாநிலங்களில் இருந்து புகையிலை, கள்ளச்சாராயம் கடத்தி வந்த இவர்கள் தொழிலாளர்கள் போர்வையில் கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் எங்கிருந்து இதனை வாங்கி வந்தனர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடியில் இருந்து முந்தல், போடிமெட்டு சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இவர்கள் நீண்ட காலமாக புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.