உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,147 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

Published On 2022-06-23 15:52 IST   |   Update On 2022-06-23 15:52:00 IST
  • மூன்று சிறிய மதகின் மூலமும், 3147 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
  • நீர்திறப்பால், தரைப்பாலத்தை மூழ்கடித்து இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அணைக்கு 2299 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 2426 கன அடிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 2563 கன அடியாக மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையில் உள்ள எட்டு பிரதான மதகுகளில், ஒரு மதகில் இருந்தும், மூன்று சிறிய மதகின் மூலமும், 3147 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 50.25 அடியாக நீர்மட்டம் இருந்தது.

நீர்திறப்பால், தரைப்பாலத்தை மூழ்கடித்து இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், அணைக்குள் வர பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு, பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி வைக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News