உள்ளூர் செய்திகள்

வீட்டு கடன் வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.11 லட்சம் மோசடி

Published On 2023-08-26 08:13 GMT   |   Update On 2023-08-26 08:13 GMT
  • அரியலூர் ஆண்டிமடம் அருகே வீட்டு கடன் வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த ஆசாமி சிக்கினார்
  • கேரளா, கோவை , ஈரோடு பகுதியில் பதுங்கிய நபரை பொறி வைத்து பிடித்த போலீசார்

செந்துறை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 33) இவர் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் சிறுகளத்தூர்,பொன்பரப்பி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 12 பேரிடம் வீட்டுக் கடன் வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை பெற்றார். பின்னர் வங்கியில் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தினார். கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கடன் பெற்று தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் மணிவேல் பணத்தை கொடுக்க மறுத்தார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட இளவரசன் உள்ளிட்டவர்கள் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவேலை தேடினர். போலீசார் தேடுவதை மோப்பம் பிடித்த அவர் கோவை, கேரள மாநிலம் பாலக்காடு, ஈரோடு என தலைமறைவாக சுற்றித்திரிந்தார். போலீசார் செல்போன் டவர் மூலம் அவரை பின்தொடர்ந்தனர். கடைசியாக ஈரோட்டில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த மணிவேலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் அரியலூர் கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்தி செந்துறை குற்றவியல் நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா முன்பு ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News