உள்ளூர் செய்திகள்

ஊட்டி, கோத்தகிரியில் அனுமதியின்றி இயங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு அபராதம்

Published On 2023-07-15 14:42 IST   |   Update On 2023-07-15 14:42:00 IST
  • கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
  • உரிய தகுதிச்சான்றுடன் 15 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் பாதாள சாக்கடை முழுமையாக இல்லாததால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களின் பதிவு புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதியப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

எனவே, கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிவு செய்யப்பட வில்லையென்றால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப் புத்தகம் மற்றும் அனுமதிச் சீட்டில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என உரிய தகுதிச்சான்றுடன் 15 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தவறினால் அனுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் கழிவுநீரை தொடர்ந்து கொட்டி வருவதாக கூறி அருகில் உள்ள பொதுமக்கள் கழிவுநீர் அகற்றும் வாகனத்தை சிறைபிடித்தனர். மேலும் அந்த வாகனத்தை கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா கோத்தகிரிக்கு வந்து அந்த வாகனத்தை ஆய்வு செய்தார். அப்போது அதற்கான பதிவு மற்றும் அனுமதி உரிமம் இல்லை என்பது தெரியவந்தனது. இதனால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். அதேபோல அனுமதி பெறாமல் கோத்தகிரி, ஊட்டியில் இயங்கிய 2 வாகன உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்று பள்ளி வாகனங்களில் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News