உள்ளூர் செய்திகள்

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க கோரி ஆகஸ்டு 15-ல் உண்ணாவிரதம்

Published On 2023-07-18 08:43 GMT   |   Update On 2023-07-18 08:43 GMT
  • கோவை பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடந்தது.
  • நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க முன்வர வேண்டும்.

கோவை,

பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு 15-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

கோவை பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடந்தது. சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆறுகளிலும், பாசன கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதால் மாசு ஏற்பட்டு வருவதை தடுத்து நிறுத்த நீர்ப்பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க முன்வர வேண்டும்.

வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகைப் பதிவை ரத்து செய்து விளைநிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 360 ஏக்கர் நிலத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை கைவிட வலியுறுத்தியும், விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி பேரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News