உள்ளூர் செய்திகள்

தேங்காயை காயவைத்து கொப்பரையாக விற்பனை செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Published On 2023-07-26 15:18 IST   |   Update On 2023-07-26 15:18:00 IST
  • விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு தேங்காய் அளவை பொறுத்து ரூ.5 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்கின்றனர்.
  • தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

தருமபுரி,

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டி பாளையம், திருநெல்வேலி உள்பட பல பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.

இப்பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காயை விவசாயிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரு ஆண்டாக தென்னைமரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை காட்டிலும் கடந்த இரண்டு மாதமாக தேங்காய் வரத்து 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் தேங்காய் விலை கடும் சரிவை சரிந்துள்ளது. இதன் காரணமாக தேங்காயாக விற்பனை செய்வதைவிட அதை காய வைத்து கொப்பரையாக விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொப்பரையாக விற்கும்போது சற்று லாபம் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் பரவலாக தென்னைமரங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 டன் தேங்காய் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி மாதங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரிக்கும். இம்மாதங்களில் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரிக்கும்.

இதனால் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு தேங்காய் அளவை பொறுத்து ரூ.5 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்கின்றனர்.

இவ்வாறு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அந்த தேங்காயை ரூ.8 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கின்றனர். தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

நஷ்டத்தில் இருந்து தப்பிக்க பல விவசாயிகள் தேங்காயை உடைத்து காயவைத்து கொப்பரையாக விற்பனை செய்து வருகின்றனர். கொப்பரையாக விற்பனை செய்யும்போது ஒரளவுக்கு லாபம் கிடைத்து வருகிறது.

எங்களிடம் கொப்பரை வாங்குபவர்கள் அதை தேங்காய் எண்ணெய் அரவை ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். அரவை ஆலைகளில் கொப்பரை வரத்து அதிகரிப்பால் அங்கு தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் சற்று அதிகரித்துள்ளது என வியபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News