வீட்டு மனை பட்டா வழங்க கோரி அம்மணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
- மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி கூறினார்.
பெரியபாளையம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் வட்டக் குழு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை உட்பிரிவு செய்து கிராம கணக்குகளில் பதிவு செய்யக்கோரியும், வகை மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யக் கோரியும் நேற்று திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டச் செயலாளர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
மாகரல், குமக்கம்பேடு-இந்திரா நகர், அம்மணம்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு 2008-ம் ஆண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தியதின் பேரில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த பட்டாக்களை உட்பிரிவு செய்து கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு திருவள்ளூர் தாசில்தாரிடம் கடந்த ஜூலை மாதம் கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கிராம நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவில்லை. மேலும், வழங்கிய பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. இவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து நேற்று போராட்டம் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை அறிந்த திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் அலுவலர் சரவணன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரதாசன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், பட்டா வேண்டி 300 பேர் நேற்று மனு அளித்தனர். இதில், 200 மனுக்கள் புதியதாக பட்டா வழங்க கோரியும், 100 மனுக்கள் வகை மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இதில், நத்தம் பகுதியில் இருப்பவருக்கு 15 நாட்களுக்குள்ளும், தோப்பு-பாட்டை பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு மாதத்திலும், மேய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி கூறினார். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் இரண்டு மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.