உள்ளூர் செய்திகள்

இலவங்காய்களை பறிக்காததால் மரத்தில் இருந்து விழுந்து வெடித்து சிதறி கிடக்கும் பஞ்சு.

கடமலை, மயிலை ஒன்றியத்தில் இலவம் பஞ்சு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2023-02-27 04:54 GMT   |   Update On 2023-02-27 04:54 GMT
  • விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.
  • அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலை ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் இலவ மரம் வைத்து பராமரித்து வருகின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் அதிக அளவு இலவம்பஞ்சு விளை விக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

கடந்த ஆண்டு 1 கிலோ இலவம் பஞ்சு ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. ஆனால் இந்த வருடம் ரூ.60க்கு மட்டுமே விற்பனையாகிறது. விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.

இதனால் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். அவை தாமாக உதிர்ந்து கிழே விழுந்து வெடித்து வருகிறது. இலவம் பஞ்சை பிரித்து அதனை தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமும் ஏற்றிக் கொண்டு விற்பனைக்கு செல்கின்றனர்.

பல இன்னல்களுக்கிடையே இதனை கொண்டு செல்லும் போது உரிய லாபம் கிடைக்காததால் வேதனையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News