கோப்பு படம்.
குமுளி வனப்பகுதியில் கொட்டும் மழையில் விவசாயிகள் 3ம் நாளாக போராட்டம்
- 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து நீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர்.
- கோர்ட்டு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் அதிகாரிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லை கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள அமராவதிபுரம் ஆசாரிபள்ளம் பகுதிகளில் விவசாயம் செய்து வந்தவர்களை வனத்துறையினர் கடந்த 1994ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றினர்.
70 ஆண்டு காலமாக விவசாயம் செய்த எங்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது எனக் கூறி வன உரிமைக்குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல் சுரேந்திரன் மூலம் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் அவர்கள் குமுளி வனப்பகுதியில் விவசாயம் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வனப்பகுதிக்கு சென்ற ராமர், பாண்டியன், நல்லா, சாமித்தேவன், விஜயராணி உள்பட 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து தங்கினர்.
அவர்கள் அங்கே தங்க கூடாது என கம்பம் மேற்கு வனத்துறையினர் தடுத்தனர். நீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர்.
அமராவதிபுரம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் தங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2ம் நாளாக நேற்று 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வனப்பகுதியில் அனுமதியின்றி தங்குபவர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.
இது பற்றி முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் இன்று 3ம் நாளாக குமுளி வனப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோர்ட்டு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் அதிகாரிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இன்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.