உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரம் சந்தைக்கு இன்று கொண்டு வரப்பட்ட மாடுகளை படத்தில் காணலாம்.

ஒட்டன்சத்திரத்தில் களைஇழந்த மாட்டுச்சந்தையால் விவசாயிகள் ஏமாற்றம்

Published On 2022-12-05 11:03 IST   |   Update On 2022-12-05 11:03:00 IST
  • தொடர் மழை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் மாடுகள் விற்பனை குறைந்த அளவே நடைபெற்றது.
  • விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு கரூர், காங்கேயம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கு விற்பனை செய்யும் மாடுகள் அதிக அளவில் கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

குறிப்பாக கேரளாவில் இறைச்சிக்காக இங்கிருந்து மாடுகள் வாங்கி செல்லப்படுவது வழக்கம். தற்போது தொடர் மழை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் மாடுகள் விற்பனை குறைந்த அளவே நடைபெற்றது. எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாததாலும் மாடுகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து பால்கடை பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி வெள்ளையன் கூறுகையில், கால்நடை சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் 700 முதல் 900 மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற்ற கால்நடை சந்தைக்கு அதிக அளவில் மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படவில்லை. சுமார் 200க்கும் குறைவான மாடுகளே கொண்டுவரப்பட்டன.

இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாங்க வியாபாரிகள் வரவில்லை. மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர் என்றார்.

Tags:    

Similar News