உள்ளூர் செய்திகள்

சென்னையில் 333 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

Published On 2023-04-01 13:42 IST   |   Update On 2023-04-01 13:42:00 IST
  • முதல்கட்டமாக சென்னை உள்பட 21 மாநகராட்சி பகுதிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • காலை உணவு தயாரித்து வழங்குவதற்கு சமையல் கூடங்கள் தனியாக செயல்பட்டு வருகிறது.

சென்னை:

அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு இடைநிற்றல் இல்லாமல் முறையாக வர வேண்டும் என்பதற்காக காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை குழந்தைகள் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதையொட்டி இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல்கட்டமாக சென்னை உள்பட 21 மாநகராட்சி பகுதிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள 38 துவக்கப்பள்ளியில் படிக்கும் 5220 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. 2-வது கட்டமாக பிப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு பள்ளி இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் காலை உணவு திட்டம் ஜுன் மாதம் முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 333 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பள்ளியில் படிக்கும் 63 ஆயிரம் குழந்தைகள் வருகிற ஜுன் மாதம் முதல் காலை உணவு சாப்பிடுவார்கள்.

காலை உணவு தயாரித்து வழங்குவதற்கு சமையல் கூடங்கள் தனியாக செயல்பட்டு வருகிறது. நவீன சமையல் கூடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு அங்கிருந்து உணவு வினியோகிக்கப்படுகிறது.

கூடுதலாக சமையல் கூடங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மாணவர்கள் காலை உணவு சாப்பிடக்கூடிய பள்ளிக்கு மையப்பகுதியில் உணவு தயாரித்து தாமதம் இன்றி வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்கின்றனர்.

Tags:    

Similar News