உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் யூக்கலிப்டஸ் மரங்கள் அகற்ற கணக்கெடுப்பு தேவை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Published On 2022-10-15 05:03 GMT   |   Update On 2022-10-15 05:03 GMT
  • தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூக்கலிப்டஸ் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
  • அரசின் அனுமதி கிடைத்தவுடன் மரங்களை கணக்கெடுத்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூக்கலிப்டஸ் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பாக கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்களில் இயற்கைக்கு மாறாகவும், நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் யூக்கலிப்டஸ் மரங்களை முற்றிலும் அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குன்னூரில் தற்போது யூக்கலிப்டஸ் மரங்கள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மொத்தமுள்ள மரங்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டு அதன் உயரம், சுற்றளவு ஆகியவை அளவீடு செய்து எண்கள் குறிப்பிடும்பணி நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் இப்பணிகள் முடிந்த பிறகு அதன் அறிக்கை மாவட்ட கலெக்டர் மூலம் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இது வரை யூக்கலிப்டஸ் மரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட வில்லை.

கொடைக்கானலில் வருடம் முழுவதும் மழை பெய்தாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சியான நிலை உள்ளது. இங்குள்ள யூக்கலிப்டஸ் மரங்களை முற்றிலும் அகற்றி சோலை மரக்காடுகள் உருவாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் ஊன்றப்பட்ட யூக்கலிப்டஸ் மரங்களால் தற்போது தைலம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். ஆனால் இவ்வகை மரங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் ரேஞ்சர் சிவக்குமார் தெரிவிக்கையில், ஊட்டி வனக்கோட்டத்தின் கீழ் உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலய பகுதியாகும். இங்கு யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டும் போது அதனை எங்கு விற்பனை செய்வது? எவ்வாறு கொண்டு செல்வது? என்பதில் பிரச்சினைகள் உள்ளது. இது குறித்து அரசுக்கு வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் மரங்களை கணக்கெடுத்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கும் என்றார்.

Tags:    

Similar News