உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த கட்டுரை போட்டிகள்

Published On 2023-08-12 16:01 IST   |   Update On 2023-08-12 16:01:00 IST
  • 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 50 பேர் வீதம், 150 பேர் கலந்து கொண்டனர்.
  • தொல்லியல் கட்டுரைப் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டிகள், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரையில் நேற்று நடந்தது. 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 50 பேர் வீதம், 150 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, பண்டைத் தமிழ்ச் சமூகம் என்ற தலைப்பில் கட்டுரை எழுத இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டது.

150 பேரில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுத்து, முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தொல்லியல் கட்டுரைப் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். கட்டுரைப் போட்டியை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தர்மபுரி காப்பாட்சியர் பரந்தாமன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு முதல் மூன்று பேரை தேர்வு செய்கின்றனர். தேர்வாகும் மூன்று பேர் மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 3 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வரலாற்று ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News