உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்ற நபரால் பரபரப்பு

Published On 2023-02-23 09:45 GMT   |   Update On 2023-02-23 09:45 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் மீது சாலையில் இருந்த தண்ணீர் பட்டதாக கூறப்படுகிறது.
  • ஆத்திரமடைந்த அந்த நபர் பள்ளி வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர்-பவானி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை வெள்ளித்திருப்பூர், ஆலம்பாளையம், எண்ணமங்கலம், மூலக்கடை, சங்கரா பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் காலை நேரங்களில் பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மீண்டும் அவர்களை மாலையில் விடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளி வாகனம் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

அப்போது சங்கராபாளையம் பகுதியை கடந்து கெட்டிச்சமுத்திரம் ஏரி பகுதிக்கு அருகில் பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் மீது சாலையில் இருந்த தண்ணீர் பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் பள்ளி வாகனத்தை மோட்டார் சைக்கிளில் சென்று குறுக்கே மறித்து பள்ளி வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பள்ளி வாகனம் அரை மணி நேரத்திற்கு மேலாக அதே பகுதியில் நின்று கொண்டிருந்தது.

இதனையடுத்து பள்ளியின் தாளாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தின் சாவியை பிடுங்கி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் வாகனத்தின் உள்ளேயே அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News