உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கிய இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு

Published On 2022-10-28 15:12 IST   |   Update On 2022-10-28 15:12:00 IST
  • அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடவே அனைவரும் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று விட்டனர்.
  • காயம் பட்ட அஜித் மற்றும் பழனிச்சாமி 2 பேரும் சிகிச்சைக்காக கோபி மருத்துவமனையில் சேர்ந்தனர்.‌

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கரிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 23). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அஜித்தின் மாமா சங்கர் என்பவருக்கும், சிறுவலூரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் கடந்த மாதம் சிறுவலூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வாய் தகராறு ஏற்பட்டு பிரதாப் குடிபோதையில் சங்கரையும் மற்றவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

தனது மாமா சங்கர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை பிரதாப் திட்டியதற்கு ஊருக்கு வந்திருந்த அஜித், பிரதாப்பிடம் ஏன் எதற்காக எனது மாமாக்களிடம் தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார்.

இதனால் பிரதாப் அஜித் மீது முன்பகை கொண்டு தீபாவளி அன்று தனது நண்பர்களான இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், தமிழரசன் மற்றும் சீனி ஆகியோருடன் சேர்ந்து சிறுவலூரிலிருந்து அஜித் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் வீட்டிற்கு வெளியே கோவிலில் உட்கார்ந்து இருந்த அஜித்தை பார்த்து உனது மாமாவை திட்டினால் உனக்கு எதற்கடா ரோஷம் வருது என பேசி தகாத வார்த்தை களால் பேசியும் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து கையாலும், காலாலும், கற்களாலும் அடித்துள்ளனர்.

அஜித்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது உறவின ரான பழனிச்சாமி என்பவர் ஓடி வந்து தடுக்க முயன்றபோது, அனைவரும் சேர்ந்து பழனிச்சாமியையும் அடித்து உதைத்து கல்லால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடவே அனைவரும் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று விட்டனர். காயம் பட்ட அஜித் மற்றும் பழனிச்சாமி 2 பேரும் சிகிச்சைக்காக கோபி மருத்துவமனையில் சேர்ந்தனர்.‌

அஜித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவரை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து அஜித் கொடுத்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரதாப், தமிழரசன் மற்றும் சீனி ஆகியோரை தேடி வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட பிரதாப் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுவலூர் போலீஸ் நிலை யத்தில் மற்றொரு அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News