உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் சாவிலும் இணைபிரியாத தம்பதி

Published On 2025-08-15 10:45 IST   |   Update On 2025-08-15 10:46:00 IST
  • கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர்.
  • சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு:

ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் வளையக்கார வீதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர். எந்த விழாவானாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். அவ்வப்போது இவர்களது மகன், மகள்கள் வந்து பார்த்து செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அன்னியப்பன் வீட்டில் இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதிலிருந்து அள்ளியப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அன்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.

இதனால் வேதனை தாங்காமல் பாப்பம்மாள் கணவரின் பிரிவை நினைத்து அழுது கொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் மாலை அன்னியப்பன் உடல் இறுதி சடங்கு செய்ய கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்த பாப்பம்மாள் திடீரென உயிரிழந்தார். இதனை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்த தம்பதிகள் சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News