உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை பயிற்சி முகாம்- ஆட்சியர் துவக்கி வைத்தார்

Published On 2022-12-03 12:21 GMT   |   Update On 2022-12-03 12:21 GMT
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்பாக்கத்தில் பயிற்சி ஒத்திகை நடைபெறும்.
  • சென்னை அணுமின் நிலைய இயக்குனர் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைத்தார்.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புதியதாக கட்டி வரும் பாவினி அதிவேக அணு உலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏதேனும் அணுக்கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதிலிருந்து மக்களையும், கால் நடைகளையும் காப்பாற்றுவது எப்படி என்கின்ற பயிற்சி ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

அவசரநிலை ஒத்திகையை முன்னிட்டு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையேயான புரிதல், தொடர்பு, ஒருங்கிணைதல், நடவடிக்கை உள்ளிட்ட அலுவல் முறை பயிற்சிக்கான முகாமை கல்பாக்கம் நகரிய குடியிருப்பில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று துவங்கி வைத்தார்.

இதில் சென்னை அணுமின் நிலைய இயக்குனர் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் பேரிடர் மேலாண்மை மீட்டு குழு கமாண்டண்ட் அருண் மற்றும் கல்பாக்கம் அணுசக்தி துறையின் உயர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் என அனைத்து துறையினரும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் அணுக்கசிவு ஏற்பட்டால் முதற்கட்டமாக எப்படி மீட்பது என்பது குறித்த விபரங்களை கூறி, ஒத்திகை செய்து காட்டினர்.

Tags:    

Similar News