உள்ளூர் செய்திகள்

எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம்: தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றகோரி வாக்குவாதம்

Published On 2022-11-29 11:15 GMT   |   Update On 2022-11-29 11:15 GMT
  • ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
  • ஆவடியில் இருந்து மாளந்தூர் வரை செல்லும் மாநகரப் பேருந்தை ஏனம்பாக்கம், ஆவாஜிப்பேட்டை வழித்தடத்தில் இயக்க வேண்டுகோள்

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டான்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குழந்தை வேலு, திருமலை, சரவணன், ரவி சிவாஜி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அம்மணம்பாக்கம் தாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த ஏரி தற்போது காணாமல் போய்விட்டது. தற்போது தாமரைப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாட்டு நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி மீட்டு தர வேண்டும் என கூறியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், ஆவடியில் இருந்து மாளந்தூர் வரை செல்லும் மாநகரப் பேருந்தை ஏனம்பாக்கம், ஆவாஜிப்பேட்டை வழித்தடத்தில் இயக்க வேண்டும், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், ஏ.ஜி.எம்.டி பணியை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்பெனி ஒன்றுக்கு அப்ரூவல் வழங்க ரூ.35 லட்சம் ஊழல் நடைபெற்றதாக மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். அந்த பிரச்சனை குறித்து அடுத்த கூட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கையை 60 நாட்களில் நிறைவேற்றி தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி கூறினர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் நன்றி கூறினார்.

Similar News