- கல்வி விழிப்புணர்வு முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.
- மாணவர்களுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் வேளாங்கண்ணி கல்விக்குழுமம் சார்பில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு பயத்தை நீக்கும் வகையில் "தேர்வைக் கொண்டாடுவோம்"என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.
இந்த முகாமிற்கு வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். இதில் நடிகரும், கல்வியாளருமாகிய நடிகர் தாமு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பொதுத்தேர்விற்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் ஒரு குறிக்கோள் அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு மதிப்பெண் எடுக்க போகிறேன் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அதையே பிறகு உங்களின் கனவாக்கிக்கொள்ளுங்கள்.
அதிக மதிப்பெண்கள் பெற தொடர் முயற்சியை விட்டுவிடாதீர்கள். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் மனதில் பதிய வைத்து, தேர்வின் போது அவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதக் கற்றுக்கொள்ளும் இயல்பை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம். செவி வழி கேட்கும் திறனை அகத்தின் வழியாக எழுத்து மூலம் நிருபித்தலே தேர்வு. இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளியில் நடந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி கல்வி குழுமத்தை சார்ந்த பர்கூர், ஓசூர், வேப்பனஹள்ளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.