உள்ளூர் செய்திகள்

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழும் காட்சி.

தொடர் விடுமுறையால் மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-10-24 05:12 GMT   |   Update On 2023-10-24 05:12 GMT
  • ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.
  • சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர். கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்ததால் மயிலாடும்பாறை போலீசார் மற்றும் மேகமலை வனவர் கள் ஈஸ்வரன், செல்வகுமரேசன் மற்றும் சட்டவனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே வனத்துறை சோதனை சாவடி அமைத்துள்ள இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். எனவே சோதனை சாவடியில் இருந்து அருவி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருவி வரை வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் அல்லது பெண்கள், வயதானவர்கள் வசதிக்காக வனத்துறையினர் சார்பில் சோதனை சாவடியில் இருந்து அருவி வரை வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News