உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடங்கியது

Published On 2022-12-08 09:47 GMT   |   Update On 2022-12-08 09:47 GMT
  • போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம் என பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
  • மாணவ- மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

தஞ்சாவூர்:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலை திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா கடந்த நவம்பர் 23 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. வட்டார அளவில் நவம்பர் 29 முதல் கடந்த 5-ந் தேதி வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தஞ்சையில் இன்று தொடங்கியது.
வருகிற 12-ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும்.

இன்று நடந்த கலைத் திருவிழா போட்டியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

தஞ்சை மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம், நவீன ஓவியம், புகைப்படம் எடுத்தல், தனிநபர் நடிப்பு உன்கிட்ட பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

இதேபோல் தஞ்சை தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஏற்கனவே வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

தொடர்ந்து வருகிற 12-ம் தேதி வரை இந்த கலை திருவிழா போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும்
மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்.

மேலும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் , கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசால் வழங்கப்படும். மாநில அளவில் தர வரிசையில் முதன்மைப் பெறும் 20 மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

தஞ்சையில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர்( தொடக்க நிலை) திராவிட செல்வன், தஞ்சாவூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கநிலை ) திருநாவுக்கரசு, கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News