உள்ளூர் செய்திகள்

தெருக்களில் தேங்கிய குப்பைகள்.

திண்டுக்கல்: துப்புரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் சாலையில் குவிந்த குப்பைகள்

Published On 2023-11-22 05:32 GMT   |   Update On 2023-11-22 05:32 GMT
  • ஒப்பந்த தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை, குறைந்தபட்சம் ஊதியம் ரூ.594 வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரின்பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சேரும் குப்பைகளை சேகரிக்க 160 நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ளனர். மேலும் தனியார் நிறுவனத்தின் சார்பில் 350 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து அதனை கிடங்கில் ஒப்படைத்து வருகின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல வார்டுகளில் முறையாக குப்பைகள் வாங்குவதில்லை என்ற புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை, குறைந்தபட்சம் ஊதியம் ரூ.594 வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இருந்தபோதும் அவர்கள் இன்று பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரின்பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

கமிசனர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் பணியாட்கள் கொண்டு தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி 80 டன் குப்பைகள் சராசரியாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சேரும். அைவ ஒருநாள் அகற்றாமல் விட்டால் கூட மறுநாள் பெரும்சுமையாக மாறிவிடும். இதுதவிர தற்போது பருவமழை காலம் என்பதால் மழைநீரில் குப்பைகள் சேரும்போது கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே குப்பைகள் தேங்காத நிலையை உருவாக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News