உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 260 மி.மீ மழைப்பதிவு

Published On 2023-11-04 10:17 IST   |   Update On 2023-11-04 10:17:00 IST
  • மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை பின்னர் விட்டுவிட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 260 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை பின்னர் விட்டுவிட்டு கனமழையாக கொட்டி தீர்த்தது.

இதன்காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், பழனி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் பகுதியில்பெய்து வரும் மழை காரணமாக பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அதனை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர். மேலும் மழை சமயத்தில் மரங்கள் மற்றும் மின்வயர்கள் விழுந்து சேதம் ஏற்பட்டால் அதனை கண்காணித்து சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மழை காரணமாக சாலையோரம் வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மார்க்கெட், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளி வியாபாரிகளும் சிரமம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 260 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 65.6, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 5, பழனி 24, சத்திரப்பட்டி 10.2, நத்தம் 75.5, நிலக்கோட்டை 26, வேடசந்தூர் 15.6, புகையிலைஆராய்ச்சி நிலையம் 14, காமாட்சிபுரம் 14.2, பிரையண்ட் பூங்கா 5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News