தேன்கனிக்கோட்டை பகுதியில் யுகாதி பண்டிகை கோலாகலம்
- தெலுங்கு வருடப் பிறப்பான இன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி உண்டு மகிழ்ந்தனர்.
- இனிப்பு பலாகாரம் இந்த பண்டிகையில் சிறப்பு படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தெலுங்கு, கன்னடம், மராத்தி மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.
இந்நாளில்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாக ஐதீகம். எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்வது நல்லது என நம்பப்படுகிறது.
மேலும் வசந்தகாலத்தின் பிறப்பை குறிப்பதால் இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில் இன்று தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கணி மொழி பேசும் மக்கள் யுகாதி என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடினர்.
தெலுங்கு வருடப் பிறப்பான இன்று மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி உண்டு மகிழ்ந்தனர்.
புத்தாண்டை பிறப்பை வரவேற்க வீடுகள் தோறும் மாதோரணங்கள், வேப்பிலை தோரணங்கள் கட்டி, வீடுகள்தோறும் வண்ணக் கோலமிட்டு தெருக்கள் தோறும் மா தோரணங்கள் வேப்பிலை தோரணங்கள் கட்டியிருந்தனர்.
ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர். பின்னர் வீடுகளில் முன்னோர்களுக்கு புது ஆடைகளை வைத்து, படையலிட்டு வெல்லத்தினால் செய்யப்பட்ட ஒப்பட்டு என்ற இனிப்பு பலகாரம் செய்து இந்த இனிப்பு பலாகாரம் இந்த பண்டிகையில் சிறப்பு படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர் பேட்டராயசுவாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம், காரம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ஆறு சுவையுடைய யுகாதி பச்சடி செய்யப்படுகிறது.
இதை ஒருவருக்கொருவர் கொடுத்து யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். புதிதாக பிறக்கும் புத்தாண்டு இன்பம், துன்பம் முதலிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை குறிக்கிறது.
திருப்பதியில் கோவில் உற்சவம் அனைத்தும் யுகாதி முதல் துவங்குவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் வழிபாடு நடந்தது பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலன் கூறினர்.
ராமாயணம் சொற்பொழிவு நடந்தது கோவில்கள் தோறும் பக்தி சொற்பொழிவு நடந்தது தேன்கனிக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள கெலமங்கலம், ராயக்கோட்டை, அஞ்செட்டி, தனி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ளதால் மாவட்டத்திலுள்ள தெலுங்கு, கன்னடம், மராத்தி பேசும் மக்கள் தெலுங்கு வருட புத்தாண்டு கோலாகலமாக வரவேற்று ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.