உள்ளூர் செய்திகள்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

Published On 2022-12-06 13:03 GMT   |   Update On 2022-12-06 13:03 GMT
  • கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி காலை மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
  • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வார செவ்வாய்க்கிழமைகளில் வந்து சுவாமி தரிசனம் செய்து விளக்கு ஏற்றினால் பக்தர்களின் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக எஸ்.எஸ்.கியூ லைன் அமைத்தல்,திருக்குளம் பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி காலை மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக 4 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள், 32 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 25 இடங்களில் குடிநீர் வசதி, 7 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரம், 2 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை, 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு இடங்களில் அகன்ற டிவி திரைகள், சுமார் 2 கிமீ தூரத்திற்கு பேரிகாட்,4 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம் பந்தல், ஒரு இடத்தில் தீயணைப்பு பந்தல் ஆகிய வசதிகள் என இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதம் கந்த சஷ்டி விழாவும் இக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் விடியற்காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

எனவே, சிறப்புமிக்க இக்கோவிலில் விழா காலங்களில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு, ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தை பின்பற்றி பக்தர்களுக்கான காத்திருக்கும் அறைகளை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News