ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சத்யா பேசியபோது எடுத்த படம். அருகில், ஆணையாளர் சினேகா, துணைமேயர் ஆனந்தய்யா ஆகியோர் உள்ளனர்
ஓசூரில் படிப்படியாக வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்படும்- மேயர் தகவல்
- படிப்படியாக களையப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும்.
- மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கு ரூ.12 கோடி மதிப்பில் அலுவலகம் அமைக்க அரசுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், கூட்டரங்கில், ஓசூர் முனீஸ்வர் நகர் சர்க்கிளுக்கு, தந்தை பெரியார் சர்க்கிள் என்று பெயர் வைக்க தீர்மானம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் பா.ஜனதா கவுன்சிலர் பார்வதி நாகராஜ், சுயேட்சை உறுப்பினர் மல்லிகா தேவராஜ் ஆகியோர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் சத்யா பதிலளித்து பேசினார். மேலும், "விரிவாக்க பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன.அவை, படிப்படியாக களையப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும். ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 அரசு மற்றும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 7000 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் "முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். கூட்டத்தில் பேசிய ஆணையாளர் சினேகா," மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கு ரூ.12 கோடி மதிப்பில் அலுவலகம் அமைக்க அரசுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.38 லட்சம் மதிப்பில், கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மேயர் சத்யா தலைமை வகித்தார். ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.