உள்ளூர் செய்திகள்

தொடரும் மழை-கடும் குளிரால் நீலகிரியில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

Published On 2023-07-07 14:32 IST   |   Update On 2023-07-07 14:32:00 IST
  • ஊட்டிக்கு வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
  • கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.

மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வடிந்தோடுகிறது. தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதையும் காண முடிகிறது.

இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர் மழை பெய்து கொண்டே இருந்தால் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டிவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.மஞ்சூர், ஊட்டி, கூட லுார், பந்தலுார், அவலாஞ்சி பகுதிகளில் நள்ளிரவில், 7 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து கணிசமாக குறைந்து காணப்படுகிறது. அப்படி வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஊட்டி படகு இல்லம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்ட படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகு மட்டும் இயக்கப் பட்டன.

இதேபோல் தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News