கலைநிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்தபடம்.
கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்டங்கள் விளக்கம்
- இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்
- நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த பெல்லம்பள்ளி கிராமத்தில் வட்டார அட்மா திட்டத்தில், கோலாட்டம் மூலம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பர்கூர், பெல்லம்பள்ளி ஸ்ரீ விநாயகர் கோலாட்டம் கும்மி ஆட்ட கிராமிய கலை குழுவினர், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள், அவற்றின் பயன்கள் குறித்தும், விதைகளின் ரகங்கள் குறித்தும், இயற்கை முறையில் சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியங்களின் பயன்கள், மண் மாதிரி எடுத்தல், எடுக்கும் முறைகள், தவிர்க்க வேண்டிய இடங்கள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், சொட்டுநீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், விதை நேர்த்தி பயன்கள், கோடை உழவின் பயன்கள், அசோலா பயன்கள், பஞ்சகாவ்யா தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், ராகி வரிசை நடவு குறுத்து கலை நிகழ்ச்சியின் மூலம் எடுத்து கூறினர்.
இதில், கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் எலிசபெத்மேரி பங்கேற்று, வேளாண்மைத்துறையின் திட்ட செயல்பாடுகள், கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் பயன்கள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் பெறுதல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.