உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் காட்சி.

வண்ணார்பேட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

Published On 2022-06-08 10:45 GMT   |   Update On 2022-06-08 10:45 GMT
  • நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் பெரும் அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
  • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் என   பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார் சென்றது. இதனைத்தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

ஜே.சி.பி. எந்திரம் கொண்டு விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறியதாவது:-

வண்ணார்பேட்டையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. சாலையோரம் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடக்கிறது.  

தொடர்ந்து நிலையான கட்டிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும்.

நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் பெரும் அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதனை அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க அழகு படுத்தும் பணி விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது செயற்பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர் சிவசுப்பிர–மணியன், உதவி கமிஷனர் லெனின், சுகாதார அலுவலர் இளங்கோ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், சாலை ஆய்வாளர்கள் பழனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News