உள்ளூர் செய்திகள்

பட்டாசு கழிவுகள் விடிய விடிய அகற்றம்: 3 நாட்களில் 250 மெட்ரிக் டன் குப்பை சேகரிப்பு

Published On 2023-11-13 05:41 GMT   |   Update On 2023-11-13 05:41 GMT
  • மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன.
  • மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்து உள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கி இன்று காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடியதில் சாலைகள், தெருக்களில் தேங்கிய கழிவுகளை சேகரிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற் கொண்டது.

பட்டாசு கழிவுகள் மிக ஆபத்தானது என்பதால் அதனை மற்ற குப்பைகள் போல் சேகரித்து அகற்றாமல் அதற்காக தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு அக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன. 3 நாட்களில் இருந்து 250 டன் மெட்ரிக் பட்டாசு குப்பைகள் அகற்றட்டன.

இது குறித்து கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5750 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பட்டாசு கழிவுகள் அபாயகரமாக இருப்பதால் அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பட்டாசு கழிவுகள் அபாய கரம் என்பதால் தனியாக சேரித்து செயல்முறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் உள்ள பட்டாசு கழிவுகள் தனியாகவும், தெருவீதிகளில் உள்ள கழிவுகளை தனியாகவும் பைகளில் சேகரித்து மண்டலத்திற்கு ஒரு இடத்தில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பட்டாசு குப்பைகள் தெரு பகுதிகள், சாலைகளில் தேங்கி கிடப்பதை உடனடியாக அகற்றி நகரை சுத்தமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள அக்கறையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

Tags:    

Similar News