உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்.

திண்டுக்கல்லில் தெருவோரம் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்துகள்

Published On 2022-10-08 12:41 IST   |   Update On 2022-10-08 12:41:00 IST
  • மாடு வளர்ப்பவர்கள் காலையில் பால் கறந்துவிட்டு அதன்பிறகு அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்புவது போல தெருவில் விட்டுவிடுகின்றனர்.
  • மாநகராட்சி நிர்வாகம் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களை தெருநாய்கள் விரட்டி துரத்தி கடிப்பது நடந்து வருகிறது.

ஒரு சில தெருக்களில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி வருவதால் அவ்வழியாக செல்வதற்கும் அச்சம் அடைந்து வேறு வழியில் பொதுமக்கள் சென்றுவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுஒருபுறம் இருக்க மாடுகள் எண்ணிக்கையும், அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாலைகளில் சர்வசாதாரணமாக சுற்றி வருகின்றன.

இதனை வளர்ப்பவர்கள் காலையில் பால் கறந்துவிட்டு அதன்பிறகு அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்புவது போல தெருவில் விட்டுவிடுகின்றனர். மீண்டும் மாலையில் பால் கறக்க அதனை அழைத்துவந்து தெருவில் அவிழ்த்து விடுகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடிவிபத்துகளில் சிக்கி விடுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. கால்நடை வளர்ப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து தெருவில் சுற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News