உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கழிவு நீர் கால்வாயில் விழுந்து தவித்த மாடு

Published On 2023-07-17 15:14 IST   |   Update On 2023-07-17 15:14:00 IST
  • நேற்று இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது.
  • தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மாட்டை லாவகமாக பிடித்து அதில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இரண்டு இடங்களில் திறந்த வெளியில் பெரிய கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயில் அவ்வப்போது அப்பகுதியில் உணவுக்காக சுற்றித்திரியும் காளை மாடுகள், பசு மாடுகள் விழுந்து விடுகின்றன. இதனை சாக்கடையில் இருந்து மீட்கும் பணிகளும் அவ்வப்போது நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது.

இதனைப்பார்த்த பொதுமக்கள் ஓசூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாட்டை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினரின் பணிக்கு அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உதவினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கால்வாயில் விழுந்து தவித்த மாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அப்போது நீளமான கயிறால் கட்டப்பட்டிருந்த மாடு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக துள்ளி குதித்து ஓடியது. கார்களுக்கு இடையே மாடு துள்ளி ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மாட்டை லாவகமாக பிடித்து அதில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தனர்.

அதன் பின்னர் மாடு அங்கிருந்து ஓடி சென்றது. இந்த மீட்பு பணிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் அடிக்கடி கால்நடைகள் விழுந்து தவிப்பதும், அதனை மீட்பதும் தொடர் கதையாக உள்ளது.

எனவே இது போன்ற சாக்கடை கால்வாய்களைச்சுற்றி கம்பி வேலிகளை அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News