ராசிபுரத்தில் ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
- ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
- கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல்,மின்னக்கல், சிங்களாந்த புரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழு வதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இந்த ஏலத்தில் 4,618 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதன்படி, ஆர்.சி.எச். ரகப் பருத்தி 4,577 மூட்டைகளும், கொட்டு பருத்தி 111 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,676-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,699-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,335 முதல் அதிகப்பட்சமாக ரூ.7,000-க்கும் ஏலம் விடப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.