உள்ளூர் செய்திகள்

நீதிபதியிடம் மனு அளிக்க திரண்டு வந்த கவுஞ்சி கிராம மக்கள்.

ஐகோர்ட்டு உத்தரவை மீறி கொடைக்கானலில் சாகச சுற்றுலாவுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

Published On 2023-09-27 10:13 IST   |   Update On 2023-09-27 10:13:00 IST
  • சாகச சுற்றுலா கட்டுமான பணிகளுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் மக்கள் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.
  • இந்நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறை சார்பில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கும் பணியை தொடங்கியதால் அப்பகுதி மக்கள் நீதிபதியிடம் மனு அளித்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகள் உள்ளன. இந்த இடம் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலாத்துறை மூலம் கவுஞ்சியில் ரூ.1.75 கோடி மதிப்பில் சாகச சுற்றுலாத்தளம் அமைக்கும் பணி நடந்தது.

இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மீன்விதைப்பண்ணை அமைக்க திட்டமிட்டனர். இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டில் மக்கள் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

இந்நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறை சார்பில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுஞ்சி பகுதி கிராம மக்கள் கொடைக்கானல் நீதிபதி கார்த்திக்கிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

கவுஞ்சி பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி சுற்றுலாத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சாகச சுற்றுலாத்தளம் அமைப்பதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து நாங்கள் கேட்டபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News